மின்னல் மறைந்த பின்....


ராகவன் அப்போது தான் கண் விழித்தார். முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பச்சைப்பசேலாக இருந்த ஒரு புல்வெளியில் தான் நிற்பதைக் கண்டார். தூரத்தே அங்காங்கே மரங்களும் தென்பட்டன. சிலர் தன்னை நோக்கி வருவதையும் கண்டார். அவர்கள் தனக்குத் தெரிந்தவர்களா என்று யோசித்தார். அவர்கள் அவரை நெருங்கி வருகையில் அவர்களின் முகங்களைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவர்களில் ஒருவர் தான் கொழும்பில் இருந்த போது தன் அயல் வீட்டிலிருந்த முத்துக்கிருஷ்ணனைப் போலிருந்தார். அருகில் வந்தவர்கள் ராகவனுக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர். அவரும் தனது வணக்கத்தைத் தெரிவித்தார். தனது அயல் வீட்டு சிநேகிதனைப் போல இருந்தவரைப் பார்த்து, "நீங்கள் முத்துக்கிருஷ்ணனா?" என வினவினார். அவர் புன்னகைத்துக் கொண்டே இவர் அருகில் வந்து, "ஆமாம் ராகவன். உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி" என்றார். ஆனால் முத்துக்கிருஷ்ணன் சற்றே இளமையாக இருப்பதாகப் பட்டது ராகவனுக்கு. தாம் கொழும்பை விட்டுக் கனடா வந்து ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டனவே. அப்படியென்றால் என்னைப் போல் இவரும் அல்லவா முதுமையடைந்திருக்க வேண்டும். ஆனால் இவர் இன்னும் இளமையாக அல்லவோ தெரிகிறார். மனதில் எழுந்த சந்தேகத்தைக் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது ராகவனுக்கு. அதற்குள் முத்துக்கிருஷ்ணன் ராகவனின் கைகளைத் தன் கைகளுக்குள் ஆதரவாகப் பற்றிக் கொண்டு, "வாருங்கள் சற்றே காலாற நடந்து விட்டு வரலாம்" என்றார். இருவரும் அருகிலிருந்த ஆற்றங் கரையோரத்தில் மெதுவாக நடக்க ஆரம்பித்தனர். மற்றவர்கள் பின் தங்கி விட்டனர். "சொல்லுங்கள் ராகவன் நாம் கடைசியாகச் சந்தித்து இப்போ எவ்வளவு காலம் இருக்கும்?" என்று கேட்டார் முத்து என்று அழைக்கப்படும் முத்துக்கிருஷ்ணன். அதற்குப் பதில் சொல்வதற்கு யோசித்தார் ராகவன். முத்து இவ்வளவு இளமையாக இருக்கும் போது, நாம் கடைசியாகச் சந்தித்து இருபத்தைந்து வருடங்களுக்கு மேலென்று எப்படிச் சொல்வதென யோசித்தார். அவரிடமிருந்து அதற்கு பதிலேதும் வராது போகவே, முத்து "ஆமாம் கனடாவில் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?" என்று மீண்டும் கேட்டார். ராகவனின் மனதில் தனது கனடா வாழ்க்கை மட்டுமல்ல முழு வாழ்க்கையுமே விரிந்தது. 

எண்பத்திமூன்றில் இலங்கையில் நடந்த மிகப்பெரிய இனக் கலவரத்தின் காரணமாக மேற்கத்தைய நாடுகள் பலவிற்கும் ஏராளமான இலங்கைத் தமிழர் சென்று அகதி அந்தஸ்துக் கோரியது யாவரும் அறிந்ததே. அப்போது ராகவனின் மனைவி ருக்மணிதேவி அமெரிக்காவில் இருக்கும் ஒரு உறவினரின் உதவியுடன் அமெரிக்கா சென்று, அங்கிருந்து கனடா போர்டருக்குச் சென்று, கனடாவில் அகதி அந்தஸ்துக் கோரினார். இலங்கையில் நடந்த இனக்கலவரத்தால் கனடா உட்படப் பல நாடுகள் இலங்கைத் தமிழரை அகதிகளாக அங்கீகரித்துக் கொண்டிருந்தன. ருக்மணி அவர்களின் மகளையும் மகனையும் கூடத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள். கலவரம் நடக்கும் போது ராகவன் மட்டுநகரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கலவரம் எல்லாம் ஓய்ந்து போக்குவரத்துச் சீரானபின் தான் அவரால் கொழும்பு வர முடிந்தது. ஆனால் அவரின் வேலைத்தலத்துத் தொலைபேசி மூலம் எல்லா விபரமும் மனைவி சொல்லி விட்டாள். வீட்டைப் பூட்டித் திறப்பைப் பக்கத்திலிருந்த முத்துக்கிருஷ்ணன் வீட்டில் கொடுப்பதாகவும் வந்து வீட்டைப் பொறுப்பெடுக்கும் படியும் மனைவி சொல்லியிருந்தாள். தான் கொழும்பு வரும் வரையும் பயணத்தை ஒத்திவைக்கும் படி அவர் எவ்வளவோ கேட்டும் ருக்மணி சம்மதிக்கவில்லை. ஏற்கனவே அவர்களின் திருமண வாழ்க்கையில் சில விரிசல்கள் இருந்து கொண்டிருந்தன. அதுவும் தான் அவர் மட்டக்களப்புக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்வதற்குக் காரணம். ராகவனின் தாய் தந்தை ருக்மணியின் தாய் தந்தை போல அவ்வளவு வசதியானவர்களல்ல. ஆனாலும் அவர்களுக்கு (ருக்மணியின் தாய் தந்தையருக்கு) என்ஜினீயர் மாப்பிள்ளை தேவைப்பட்டதால் அந்தஸ்தைப் பாராமல் திருமணம் பேசினார்கள். ராகவனுக்குக் கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும் தாய் தந்தையின் விருப்பத்தைத் தட்ட முடியாமல் திருமணத்துக்குச் சம்மதித்தார். ஆரம்பத்தில் வாழ்க்கை நன்றாகத் தான் இருந்தது. ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் அவர்களுக்குப் பிறந்தனர். மகளுக்கு நீரஜா என்றும் மகனுக்குக் கவின் என்றும் பெயர் வைத்தனர். அவர்களுடன் வாழ்க்கை ஆனந்தமாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குத் தன் நிலைமை தாழ்ந்து கொண்டு போவது புரிந்தது. கொழும்பில் ருக்மணிக்கு சீதனமாகக் கொடுத்த வீட்டில் அவர்கள் இருந்ததால் அவளின் தாய் தந்தையரும் அவர்களுடன் தான் வசித்துக் கொண்டிருந்தனர். அதனால் அவளின் கை சற்று ஓங்கியே இருந்தது. எந்த முடிவும் ருக்மணி தான் எடுத்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி வீட்டில் சண்டை சச்சரவுகள் உருவாகின. தங்கள் சண்டைகளால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுமோ என்று பெரும் கவலை அவருக்கு உருவாகியது. அதெற்கெல்லாம் ஒரு தீர்வாகவே அவர் வேலை மாறுதல் வாங்கியிருந்தார். மட்டக்களப்பிலிருந்தாலும் அடிக்கடி கொழும்பு வந்து பிள்ளைகளைப் பார்க்கத் தவறவில்லை அவர். பிள்ளைகளின் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமாக அவருக்கு நினைவுக்கு வந்தது. கொழும்புக்கு வரும் வழியெல்லாம் பிள்ளைகள் இல்லா தனி வீட்டைப் பார்க்கப் போவதை எண்ணியெண்ணி மனதுக்குள் அழுது கொண்டே வந்தார். ஒருவாறு கொழும்பு வந்து முத்துகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றார். மனைவி பஜனைக்குச் சென்றதால் முத்துகிருஷ்ணன் வீட்டில் தனியே தானிருந்தார். அவரிடம் ராகவன் தனது கவலைகளையெல்லாம் கொட்டித் தீர்த்தார். முத்து அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்.  

வாழ்க்கை வெறுமையாகி விட்டது ராகவனுக்கு. வேலைக்கு லீவு போட்டு விட்டுக் கொழும்பு வீட்டில் சிறிது காலம் தங்கினார். அப்போ அவருக்கு ஆதரவாக இருந்ததெல்லாம் முத்துவும் அவர் மனைவி சசியும் தான். ராகவன் மீண்டும் வேலைக்குச் சென்றார். அங்கே சிறிது காலம் வேலை பார்த்த பின் மீண்டும் கொழும்புக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்து மறுபடியும் கொழும்பு வந்தார். மீண்டும் கொழும்பு வாழ்க்கை. ஆனால் இப்போ தனிமையில். அவர் சிறுவயதிலேயே கொஞ்சம் ஆன்மீக நாட்டமுள்ளவர். இப்போ வாழ்க்கையில் விழுந்த அடிகள் அவரை இன்னும் அதிகமாக ஆன்மீகத்துக்கு இழுத்தன. பகவத்கீதை போன்ற ஆன்மீக நூல்களில் நாட்டம் சென்றது. 

கனடாவில் அவரின் மனைவி பிள்ளைகளின் நிலைமையும் மாறியது. அகதி அந்தஸ்தில் இருந்து இப்போ அவர்களுக்குக் குடியேற்ற உரிமை (landed immigrant) அந்தஸ்துக் கிடைத்தது. இனி அவரின் மனைவி அவரை ஸ்பொன்ஸர் செய்து கனடாவுக்கு அழைக்கலாம். ஆரம்பத்தில் அவர் அந்த எண்ணத்தை வெறுத்தார். ஆனால் தான் அங்கு சென்றால் தான் பிள்ளைகளைப் பார்க்கலாம் என்பதால் அதற்குச் சம்மதித்தார். மகள் நீரஜாவுக்கு இப்போ இருபது வயது. கனடாவில் ஆங்கில வகுப்புகளுக்குப் போய் இப்போ வேலை சம்பந்தமான ட்ரெய்னிங் ஒன்றுக்குச் சென்று கொண்டிருக்கிறாள். மகன் இப்போ பிரத்தியேக ஆங்கில வகுப்புகளுடன் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். ராகவன் தான் இனிமேலும் பிள்ளைகளின் வாழ்க்கையில் இருந்து விலகியிருக்காமல் அவர்களுடன் சேர்ந்து இருப்பதாக முடிவு செய்தார். ஸ்பொன்ஸர் அலுவல் எல்லாம் முடிந்து அவருக்கு விசா வரக் கிட்டத்தட்ட ஆறேழு மாதங்கள் எடுத்தன. வீட்டையும் முத்துவின் தூரத்து உறவினர் ஒருவருக்கு விற்கக் கூடியதாக இருந்தது. ஒருவாறு அவர் கனடா வந்து சேர்ந்தார்.  

காலம் ஒருவருக்காகவும் காத்திராமல் பறந்தது. நீரஜாவுக்கு ருக்மணியின் தூரத்து உறவில் திருமணம் பேசிவந்தார்கள். ஆனால் அவள் அப்பாவின் செல்லமாதலால் அப்பாவுக்கு சம்மதமென்றால் தான் தன்னால் சம்மதம் சொல்ல முடியுமென்றாள். ருக்மணி வேறு வழியில்லாமல் ராகவனை சம்மதிக்க வைக்க அவரிடம் கெஞ்சினாள். அவரும் மாப்பிள்ளை வீட்டாரைச் சென்று பார்த்து ஒருவாறு சம்மதித்தார். திருமணம் இனிதே நிறைவேறியது. மருமகன் ஜீவகன் மகனைப் போல் அன்பாக இருக்கிறான். மகன் கவினும் பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் வாங்கி நல்லதொரு வேலையில் சேர்ந்து விட்டான். அவனுடன் வேலை செய்த ஜனனி என்னும் ஒரு தமிழ் பெண்ணை அவன் மணக்க விரும்பினான். ஆரம்பத்தில் ருக்மணி அதற்குச் சம்மதிக்கவில்லை. ஆனால் கவின் ஒரேபிடியாக நின்று ஜனனியையே திருமணம் செய்தான். இப்போ ராகவன், ருக்மணிக்கும் வயதாகி விட்டதால் சீனியர் அப்பார்ட்மெண்டில் (வயதானவர்கள் வசிக்கும் அப்பார்ட்மென்ட்டில்) வசித்து வருகிறார்கள். அவருக்கிருந்த ஆன்மீக நாட்டத்தின் காரணமாக ஆன்மீகப் புத்தகங்கள் வாசிப்பதோடு கோவில்களில் நடக்கும் சமயச் சொற்பொழிவுகள், பஜனைகள் என்று சென்று கொண்டு இருந்தார். வீட்டினருகில் நடந்த சாயி பஜனொன்று ஒவ்வொரு கிழமையும் அவரின் ஆன்மீகத் தாகத்தை ஓரளவு தணிக்க உதவியது. இப்போ பழைய பிரச்சனைகள் ஒன்றுமில்லை. ருக்மணிக்கும் வயது ஓரளவு அடக்கத்தைத் தந்துள்ளது. ராகவனுக்கு ஒரு தரம் நெஞ்சு நோ என்று ஆஸ்பத்திரிக்குச் சென்ற போது அவரின் இருதயத்துக்கு செல்லும் குழாயில் அடைப்பு இருப்பதாகச் சொல்லி இப்போ ஸ்டென்ட் வைத்துள்ளார்கள். இன்னொரு முறை நெஞ்சு நோ வந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும் என்றும் சொல்லி இருந்தார்கள். அப்போ தான் தனக்கு நெஞ்சு நோகுது என்று ருக்மணியிடம் தான் சொன்னது நினைவுக்கு வந்தது. பின்னர் படிப்படியாக ஒவ்வொன்றாக நினைவுக்கு வரத்தொடங்கியது. ருக்மணி அவரின் நிலையைப் பார்த்துக் கொஞ்சம் பயந்து விட்டாள். அவரே தான் அவசர எண்ணான ஒன்பது ஒன்று ஒன்றை அழைத்து விட்டு அவளிடம் தொலைபேசியைக் கொடுத்து விட்டுக் கட்டிலில் படுத்து விட்டார். அதன் பின் தான் அந்தப் புல்வெளியில் நின்றது தான் அவருக்கு நினைவுக்கு வந்தது. இப்போ முத்து அவரை அர்த்தமுள்ள பார்வையொன்று பார்த்தார். அப்போ தான் அவருக்கு எல்லாம் புரிந்தது. ஓ! தான் மேலுலகுக்கு வந்து விட்டேனா எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். அதைப் புரிந்து கொண்ட முத்து அவரின் கரத்தை ஆதரவாகப் பற்றினார். "ஆமாம் ராகவன் நீங்கள் பூவுலகை விட்டு வந்து விட்டீர்கள்" என்றார். "அப்போ ஏன் எல்லாமே வழமையானவை போலவே உள்ளன?" என்று ராகவன் கேட்டார். "உங்களுக்குப் போகப் போக எல்லாமே புரியும்" என்றார் முத்து. 

முத்து அவரை ஒரு மண்டபத்துள் அழைத்துச் சென்றார். அங்கே இருவர் அவர்களுக்காகக் காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் ராகவன் ஓடிச் சென்று அவர்களைத் தழுவிக்கொண்டார். அவர்கள் ராகவனின் பெற்றோர். பெற்றோருடன் அவரை விட்டு விட்டு முத்து அகன்று விட்டார். பெற்றோருடன் அளவளாவி மகிழ்ந்தார் ராகவன். பெற்றோரும் கூட இளமையாக இருப்பதாகவே அவருக்குப் பட்டது. அப்போ தான் மேலுலகிற்குச் சென்றவுடன் எல்லாரும் தமது இளமையைத் திரும்பப் பெறுவார்கள் என்று எங்கேயோ வாசித்தது நினைவுக்கு வந்தது. அப்படியென்றால் தானும் கூட இளமையாக மாறலாமென்பது புரிந்தது. பூவுலகில் இருக்கையில் தனது முடி வெண்மையாக மாறத் தொடங்கிய போது மனைவி ருக்மணி 'டை' வாங்கித் தந்து பாவிக்கும்படி வற்புறுத்தியது நினைவுக்கு வந்தது. 

முத்து இரு இளைஞர்களுடன் ராகவனைச் சந்திக்க வந்தார். அதில் ஒரு இளைஞனின் முகம் ராகவனுக்குச் சற்றே பரிச்சயமான முகமாக இருந்தது. அவரது மருமகள் ஜனனியின் (மகன் கவினுடைய மனைவி) ஒன்றுவிட்ட தம்பி செந்தூரன் போல் தெரிந்தான். முத்து, "ராகவன் இவர்களைத் தெரிகிறதா?" என்று கேட்கமுன் செந்தூரன் போல் தெரிந்த இளைஞன், "என்ன அங்கிள் நீங்களும் வந்து விட்டீர்களா?" என்று கேட்டான். அவ்விளைஞன் செந்தூரன் தான். ராகவன், "என்னப்பா நீ இங்கே ஹாயாக இருக்கிறாய். உனது வீட்டார் எவ்வளவு கவலைப்பட்டார்கள் தெரியுமா? ஏனப்படிச் செய்தாய்?" என்றார். செந்தூரன், "தெரியும் அங்கிள். நான் என்ன செய்யிற? நான் எடுத்த அந்தப் பில்ஸ் என்னை ஒழுங்காக சிந்திக்க விடேல்லை. மூளை மாறாட்டம் பண்ணீற்று. எனக்கு இங்கேயிருக்கும் மேலுலக உதவியாளர்கள் உண்மை நிலைமையைப் புரிய வைத்தார்கள். நான் முதல் ஒரு பிறவியில் ஒருவரைத் தற்கொலை செய்யத் தூண்டியிருக்கிறேன் என்று தெரிந்தது. அதனால் நானும் அதே போன்ற அனுபவத்தை அடைய விரும்பியிருந்தேன். அத்துடன் இதனால் பலரின் பழைய கர்மாக்கள் கழிந்து விட்டன. இதில் சம்பந்தப்பட்ட பல பேருடைய கர்மாக்கள் கழிந்திருக்கின்றன" என்றான். ராகவன் (செந்தூரனுக்கு அருகில் நின்றிருந்த இளம் வாலிபனைக் காட்டி) "இவர் யார்? உம்மடை ஃபிரென்டா?" என்று கேட்டார். அதற்கு அவன், "இவர் எனது அண்ணா வினோஜன்" என்றான். ராகவன், "அவர் குழந்தை அல்லவா?" என்று கேட்டார். அதற்கு செந்தூரன், "இங்கு வந்த பிறகு குழந்தைகளுக்கும் அவர்கள் வளர்ந்த ஆத்மாக்கள் தான் என்பதை உணரச் செய்வார்கள். அதன்பின் அவர்கள் தங்களுக்கு விரும்பிய வயதுக்குரிய வடிவத்தை எடுப்பார்கள்" என்றான். செந்தூரன் மேலுலகுக்கு வருகையில் அவனை வரவேற்றவர்களில் வினோஜனும் இருந்தவனாம். அதன்பின் இருவரும் குழந்தைப் பருவத்திலேயே மேலுலகுக்கு வருபவர்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ராகவன் அறிந்து கொண்டார். பூவுலகிலும் பார்க்க இங்கே ஒவ்வொருவரும் தங்களுக்குரிய வேலைகளைக் காரணங்களுடன் தாங்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள் என்பதை ராகவன் தெரிந்து கொண்டார். 

 சிறுவயதில் யாழ்நகரில் பாடசாலைக்குச் செல்லும் வழியில் இவர்களின் தெரு இன்னொரு தெருவைச் சந்திக்கும் இடத்தில் ஒரு சிறுமி தனது அப்பம்மாவுடன் பாடசாலைக்குச் செல்லும் போது தான் ராகவன் அவளை முதன்முதலில் பார்த்தது. அப்போ ராகவன் இரண்டாம் வகுப்பில் இருந்தான். அங்கிருக்கும் ஏனைய சிறுமியரை விட இவள் உடைநடை பாவனைகளில் வித்தியாசமாத் தெரிந்தாள். அவர்கள் குடும்பம் 56 ஆம் ஆண்டில் நடந்த இனக் கலவரத்தினால் கொழும்பிலிருந்து யாழ்நகருக்கு இடம் பெயர்ந்திருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக ராகவனின் குட்டி இதயத்தை அச்சிறுமி வசீகரித்துக் கொண்டாள். ராகவன் வளர வளர அவன் இதயத்திலிருந்து அந்தக் காதலும் வளர்ந்து கொண்டே வந்தது. எப்போதெல்லாம் அப்பெண்ணை அவன் காண்கிறானோ அப்போதிலிருந்து மறுமுறை அவளைக் காணும் வரை அவளின் அந்த வடிவமே அவன் மனதில் பதிந்திருக்கும். ஒருநாள் திறந்த வெளியரங்கில் நிகழ்ந்த ஒரு கலை விழாவுக்குப் பெற்றோர் அவனை அழைத்துச் சென்றனர். அங்கே அப்பெண்ணும் குடும்பத்துடன் வந்திருந்தாள். கடும் சிவப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தாள். அவளின் உருவம் அவனின் மனதில் ஆழப்பதிந்து விட்டது. 

அவளின் பாடசாலையைத் தாண்டிச் செல்லும் போது அவளை அவன் முகம் தேடும். ராகவன் இப்போ கல்விப் பொதுத்தராத சாதாரண தரப்பரீட்சைக்குப்  (10ஆம் வகுப்பு பரீட்சை) படித்துக் கொண்டிருந்தான். இரசாயனவியல் பாடம் சற்றே சிரமமாக இருந்ததால் அவனை அவனின் தாயார் டியூஷன் வகுப்புக்கு அனுப்பினார். அன்று முதல் நாள் டியூஷன் வகுப்பில் இருக்கையில் பெண்களிருந்த பகுதியில் எதேச்சையாகப் பார்வை போன போது அவளும் இருப்பதைக் கண்டான். அவன் மனம் ஆகாயத்தில் பறந்தது. அன்றிலிருந்து அவன் அவனாக இல்லை. ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தான். டியூஷன் மாஸ்டர் வரும் வரை காத்திருக்கும் போது கூட டியூஷனுக்கு வந்த மாணவர்களுடன் அளவளாவிக் கொண்டிருக்கும் போது தான் அவள் பெயர் ஜனனி என்று அறிந்தான். ஆனால் அதேநேரத்தில் அவனுக்கருகில் இருக்கும் பரணீதரன் எனும் மாணவனும் ஜனனியைப் பார்ப்பதைத் ராகவன் உணர்ந்து கொண்டான். அவன் கோபமா பொறாமையா சோகமா என்னவென்று சொல்ல முடியாத உணர்ச்சிக் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு உண்மைநிலை புரிய ஆரம்பித்தது. ஜனனியும் பரணீதரனும் உறவினர்கள் என்றும் அவர்களிடையே காதல் அரும்பி விட்டதென்றும் தெரிந்து கொண்டான். அவனுடைய காதல் செடி கருகி விழுந்து மண்ணோடு மண்ணாகி விட்டது. அதன் மேல் இப்போ புல் முளைத்து விட்டது. இப்போ ராகவன் தனது முழுக்கவனத்தையும் படிப்பில் செலவழித்தான். பரீட்சையில் நன்றாகச் செய்து 6D, 2C வாங்கினான். அட்வான்ஸ் லெவல் எனும் உயர் படிப்பிலும் நன்றாக இரண்டு வருடங்கள் படித்து 4A வாங்கினான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டான். படிப்பில் தன் மனதை ஒருமுகப்படுத்துவதற்குக் காதலில் ஏற்பட்ட தோல்வி தான் காரணம் என்பதை அவன் உள்ளூர உணர்ந்திருந்தான். அதற்காக அவன் சில சமயங்களில் மனதினுள் ஜனனிக்கு நன்றியும் சொல்லி இருக்கிறான். இவை எல்லாம் சுமார் எட்டு வயதிலிருந்து இருபது வயது வரை நிகழ்ந்த விஷயங்கள். இப்போ மேலுலகில் நிற்கையில் இவை ஏன் நினைவுக்கு வருகின்றன என ராகவனுக்கு விளங்கவில்லை. அப்போது தான் தனக்கு முன்னே ஜனனி நிற்பதை ராகவன் கவனித்தான். டியூஷன் வகுப்பில் எவ்வாறு இருந்தாளோ அதே உருவில் நின்றிருந்தாள். ராகவனுக்கு  ஒன்றுமே முதலில் விளங்கவில்லை. பின்னர் தான் புரிந்தது ஜனனி கூட மேலுலகுக்கு வந்துவிட்டாள் என்பது. அருகில் நின்றிருந்த முத்து, "இவர் உங்களைப் பார்ப்பதற்கு விரும்பினார். அதனால் அழைத்து வந்தேன்" என்றார். ஜனனி ராகவனைப் பார்த்து, "முந்தைய ஒரு பிறவியில் நீங்கள் ஒரு இளவரசியாகவும் நான் பல்லக்குத் தூக்கும் ஒரு இளைஞனாகவும் இருந்திருக்கிறோம். அப்போ உங்கள் அழகில் நான் மயங்கியிருக்கிறேன். அது உங்களுக்குத் தெரியாது. ராணியர் அல்லது இளவரசிகள் பல்லக்கில் ஏறுவதற்கு வரும்போது பல்லக்குத் தூக்குபவர்களாகிய நாங்கள் குனிந்து கொண்டு தான் நிற்க வேண்டும். ஏறியதன் பின் திரைசீலைகள் விழுந்த பின் தான் நாம் நிமிர வேண்டும். ஆனால் ஒரு நாள் நான் தற்செயலாக நிமிர்ந்த போது உங்களைக் கண்டேன். அன்றிலிருந்து நான் நானாக இல்லை. எந்நேரமும் உங்கள் நினைவிலேயே இருந்தேன். எப்போதெல்லாம் உங்களைத் தூக்கிச் செல்லும் சந்தர்ப்பம் வருகிறதோ அப்போதெல்லாம் உங்களைத் தரிசித்துக் கொண்டேயிருந்தேன். என்னைப் பெற்றவர்களுக்கு இது தெரிந்து என்னைத் தண்டித்தார்கள். ஆனால் என்னால் உங்களை மறக்க முடியவில்லை. அரசனுக்கு இது தெரியவந்தால் எனக்கு மரணதண்டனை கிடைத்திருக்கலாம். ஆனால் அதற்கு முன் நீங்கள் அயல்நாட்டு அரசனை மணந்து கொண்டு அவர்கள் நாட்டுக்குச் சென்றுவிட்டீர்கள். நானும் அதன் பின் பல்லக்குத் தூக்கும் வேலையை விட்டு விட்டு வேறு தொழில்கள் கற்றுக் கொண்டேன். பின்னர் என்னைப் பெற்றவர்கள் எனக்கு எங்கள் குலத்திலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள். அப்பிறவியில் எனது வாழ்க்கை அப்படியே கழிந்து விட்டது. அப்பிறவியின் முடிவில் நான் மேலுலகுக்கு வந்த பொழுது நீங்களும் இங்கே இருந்தீர்கள். அந்த நாட்டு அரசியாக நீங்கள் இருந்து பின் ராஜமாதாவாக இருந்து வயதாகி இறந்த பின் நீங்கள் இங்கே வந்திருந்தீர்கள். அப்போது தான் உங்களுக்கு நான் உங்கள் மேல் கொண்ட காதல் தெரியவந்தது. அப்போ என்னுடைய மனநிலை உங்களுக்குத் தெரிய வந்ததால் அதே மனநிலையை நீங்களும் அனுபவிக்க விரும்பினீர்கள். அதனால் தான் கடந்த பிறவியில் நீங்கள் என்னை விரும்பி இருக்கிறீர்கள் எனக்குத் தெரியாமலே. நான் மேலுலகுக்கு வந்ததன் பின் தான் இவையெல்லாம் எனக்குத் தெரியவந்தன. அப்போ நீங்கள் இங்கு வருகையில் உங்களைச் சந்தித்து இவ்விடயத்தைச் சொல்ல வேண்டுமென நினைத்தேன். அது தான் வந்தேன்" என்றாள். ராகவன் ஆச்சரியத்துடன் நின்றிருந்தார்.  இப்போ ஜனனி முப்பது வயதுக்குரிய உருவைப் பெற்றாள். அதையும் ஆச்சரியத்துடன் ராகவன் பார்க்க அவள் சொன்னாள், "அந்தப் பருவத்தில் நான் வந்தால் தான் நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்வீர்கள் என்பதால் தான் அப்படி வந்தேன். இங்கு பொதுவாகவே எல்லோரும் ஏறக்குறைய முப்பது வயதுக்குரிய உருவில் தான் இருப்பார்கள், வேறு ஏதாவது விதி விலக்குகள் இல்லாவிட்டால்" என்றாள். ஜனனிக்கருகில் இன்னொரு பெண் நிற்பதை ராகவன் அப்போது தான் கவனித்தார். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இருந்த ரம்யாவைப் போலிருந்தாள் அவள். தான் அவளைப் பார்த்ததும் அவள் மெதுவாகப் புன்னகைத்தாள். "ஆமாம் நீங்கள் நினைப்பது சரிதான் ராகவன். நான் ரம்யா தான்" என்றாள். 

பேராதனைப் பல்கலைக் கழகத்துக்கு வந்த புதிதில் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கையில் ராகவனுக்கு அடிக்கடி வீட்டு ஞாபகங்கள் வரும். அவ்வளவு காலமும் வீட்டில் செல்லப் பிள்ளையாக இருந்ததால் திடீரென்று ஹாஸ்டலில் இருப்பது கஷ்டமாக இருந்தது. நினைத்தவுடன் வீட்டுக்குச் செல்லமுடியாத அளவு தூரத்தில் அல்லவா பெற்றோர் இருந்தனர். அதனால் அந்தத் துயரைத் தீர்க்க அவர் கோவிலை நாடினார். அங்கேயுள்ள குறிஞ்சிக் குமரன் கோவில் அவருக்குப் புகலிடமாய் அமைந்தது. அங்கே திருவிழா நாட்களில் சாமி தூக்குவதோ இறைவனை அலங்கரிப்பதோ எல்லாவற்றிலும் மும்முரமாக ஈடுபட்டார். படிக்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் கோவிலிலேயே செலவழித்தார். பல்கலைக் கழகத்தில் இயங்கிய இந்து மாணவர் சங்கத்திலும் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது தான் ரம்யாவைச் சந்தித்தார். அவளும் கோவிலுக்கு ஒழுங்காக வருவாள். விஞ்ஞான பீடத்தில் படித்துக் கொண்டிருந்த ரம்யா கோவில் திருவிழாக்களுக்கோ நவராத்திரி, திருவெம்பாவை போன்ற விழாக்களுக்கோ பக்திச் சிரத்தையோடு சேலை கட்டிக் கொண்டு வருவாள். பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்ப் பெண்கள் வேறு உடைகள் அணிந்தாலும் கோவிலுக்குச் சேலைகளுடன் தான் வருவார்கள். ஆரம்பத்தில் ராகவன் அவளைக் கவனிக்கவில்லை. ஒருமுறை ராகவன் கோவிலில் வசந்த மண்டபத்துக்கு சாமியை அலங்கரிப்பதற்குச் செல்லும் பொழுது ரம்யா எதிர்பக்கத்தில் கோவிலைச் சுற்றிக் கொண்டு வந்து  கொண்டிருந்தாள். இடையில் தூண் இருந்ததால் அவள் வருவதைக் கவனிக்காமல் ராகவன் விரைந்தான். அப்போ இருவரும் மோதிக் கொண்டனர். அவள் கையில் வைத்திருந்த அர்ச்சனைத் தட்டம் கீழே விழுந்து அதிலிருந்த பொருட்கள் எல்லாம் நிலத்தில் சிதறி விட்டன. ராகவன் கையில் வைத்திருந்த பூத்தட்டமும் விழுந்து பூக்கள் நிலத்தில் சிதறின. இருவரும் நிலத்தில்  விழுந்தனர். ஒருவாறு சுதாரித்துக் கொண்டு இருவரும் எழும்புவதற்குள் மற்ற மாணவர்கள் ஓடோடி வந்தனர். இருவரும் ஒருவரிடம் மற்றவர் மன்னிப்புக் கேட்டனர். நிலத்தில் வீழ்ந்த அர்ச்சனைப் பொருட்களுக்குப் பதில் ராகவன் வேறு பொருட்கள் கொண்டுவந்து கொடுத்தான். ரம்யாவும் ராகவனின் தட்டில் மீதமிருந்த பூக்களுடன் வேறு புதிய பூக்களை வைத்து அவனிடம் கொடுத்தாள். ஒருவாறு நிலைமை சுமூகமானது. ஆனால் இருவரின் மனதிலும் சலனங்கள் ஏற்பட்டன. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ராகவனின் தலை தனது தலையை மோதிய இடத்தை ரம்யா தடவிப் பார்த்துக் கொண்டாள். அதைக் கண்ட ராகவனும் தனது தலையையும் அதே இடத்தில் தடவிப் பார்த்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். அவளுக்கு நாணத்தில் முகம் சிவந்தது. இவ்வாறே கோவிலில் இருவரும் பார்வைப் பரிமாற்றங்கள் செய்து கொண்டிருந்தனர். அவளிடம் நேரே சென்று கதைப்பதற்கு அவன் யோசித்தான். நண்பர்கள் யாரிடமேனும் உதவி கேட்கலாமா என அவன் யோசித்தான். அதற்குள் விடுமுறை வந்தது. விடுமுறை முடிந்து வந்ததும் அவளிடம் கதைக்க வேண்டுமென்று முடிவு செய்து கொண்டான். அம்முறை விடுமுறைக்கு வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் தான் சென்றான்.    

விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பும் போது ராகவனின் தூரத்து உறவுமுறையான சிவமலர் என்ற பெண்ணின் பெற்றோர் அவளுக்கு ஒரு சில உணவுப் பதார்த்தங்களைக் கொடுக்கும் படி ராகவனிடம் கொடுத்து விட்டிருந்தனர் (சிவமலர் மூன்றாமாண்டு என்பதால் லீவுக்கு ஹாஸ்டலில் தங்கிப் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தாள்). அதனைக் கொடுப்பதற்காகப் பெண்கள் ஹாஸ்டலுக்குச் சென்ற போது ரம்யாவும் அங்கே தான் தங்கியிருக்கிறாள் என்பதை ராகவன் கண்டு கொண்டான். ஆனால் அதே நேரம் சிவமலருடன் ராகவன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட சிலர் ராகவனுக்கும் சிவமலருக்கும் காதல் என்பதாகக் கதைகள் கட்டி விட்டனர். அதை ரம்யாவும் நம்பிவிட்டாள் போலும் அவளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. முதலில் அவனைத் தேடிய கண்கள் இப்போ குனிந்த பார்வையாய் மாறின. ராகவனின் மனதில் மறுபடி ஏமாற்றம் ஏற்பட்டது. 

தானும் ரம்யாவும் ஒரு பிறவியில் கணவன் மனைவியாக இருக்கையில் அவர்களது உறவுக்காரப் பையன் குறைந்த சாதிப் பெண்ணை விரும்பி இருந்தான். இவர்கள் இருவரும் சாதியைக் காரணம் காட்டி அக்காதலர்களைப் பிரித்து விட்டதாகவும் அதே மனநிலையை அவர்களிருவரும் அனுபவித்துப் பார்ப்பதற்காகத் தான் கடந்த பிறவியில் அவர்களிருவருக்கும் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது என்றும் தெரிய வந்தது.              

அந்த ஹாலில் பலர் அமர்ந்திருந்தனர். ராகவனும் முத்துவும் வரிசையாக இருபக்கமும் அடுக்கியிருந்த பெஞ்ச் நாற்காலிகளின் நடுவே இருந்த இடைவழியால் நடந்து மேடையருகே சென்றனர். அம்மேடையில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராகவனின் உடல் ஒரு நீண்ட பெட்டியுள் வைக்கப்பட்டிருந்தது. ராகவனுக்கு நம்ப முடியவில்லை. இதென்ன நான் இங்கே இவ்வளவு உயிர்ப்புடன் இருக்கையில் ஏன் எனது உடல் மட்டும் இயக்கம் ஒன்றுமில்லாமல் கிடக்கிறதென யோசித்தார். எலும்பாலும் தசையாலுமான பூவுடலுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட வயது தானிருக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார். திரும்பி நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். முன் வரிசையில் ருக்மணி, மகள், மகன் ஆகியோர் அழுது கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது. தானிருக்கும் நிலையை உணராமல் அவர்கள் வெறும் பூதவுடலுக்காக அழுது கொண்டிருப்பதை எண்ணி வருந்தினார். ஆனால் என்ன செய்வது அவர்களுக்குத் தன் நிலையை உணர்த்த முடியாதே. தானும் தனது பெற்றோரின் இழப்புகளைத் தாங்க முடியாமல் இப்படித்தானே கவலைப்பட்டேன் என மனதை ஆற்றிக் கொண்டார். முத்துவுடன் அவ்விடத்தை விட்டு அகன்றார். 

ராகவனுக்குத் தனது மனதில் ஏன் இப்படியொரு உணர்வு என்று புரியவில்லை. தான் அங்கு வந்ததிலிருந்து மனதில் ஒரு மகிழ்ச்சியான உணர்வை மட்டுமே இதுவரை உணர்ந்திருக்கிறார். இப்போ ஏன் மனதில் ஒரு சஞ்சல உணர்வு இழையோடுகிறது என்று யோசித்தார். யாரோ தன்னைக் கீழ்நோக்கி இழுப்பது போல் உணர்ந்தார். முத்து அவரின் உதவிக்கு வந்தார். இருவரும் அந்த உணர்வு காட்டிய பாதையில் சென்றனர். அப்பாதை ராகவனின் மகள் நீரஜாவின் வீட்டுக்கு அவர்களை அழைத்துச் சென்றது. அங்கே நீரஜா ராகவனின் படத்துக்கு முன் இருந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள். அவள் கணவன் ஜீவகன் அவர்களின் இரு பிள்ளைகளையும் அணைத்து வைத்துக் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். பிள்ளைகளும் அழுது கொண்டிருந்தனர். இந்தக் காட்சி ராகவனை என்னவோ செய்தது. தான் நலமாக இருக்கிறேன் என்று நீரஜாவுக்கு எப்படிச் சொல்வதென்று ராகவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக முத்து ராகவனின் படத்திலிருந்து மாலையை நீரஜாவின் மடியில் விழவைத்தார். நீரஜா அழுகையை நிறுத்தி விட்டு மாலையைக் கையில் எடுத்தாள். ஜீவகன் சொன்னான், "பார்த்தாயா நீ அழுவது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. அது தான் மாலை விழுந்தது" என்று. நீரஜா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழும்பினாள். அழுது கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்து ஆறுதல் சொன்னாள். அப்போ ராகவன் முத்துவிடம், "இன்றைய பிரச்சனை ஒருவாறு முடிந்தது. நாளையும் இதே மாதிரி நடந்தால் என்ன செய்வது? நான் இங்கே நலமாக இருக்கிறேன். என்னை நினைத்துக் கவலைப்பட வேண்டாம் என்று நீரஜாவுக்கு நான் எப்படிச் சொல்வது" என்று கேட்டார். முத்து, "பூவுலகில் இருப்பவர்களுடன் நாம் தொடர்வு கொள்வது அவர்களின் வெளிமனம் செயலற்றிருக்கும் போது தான் சாத்தியம். அதாவது அவர்கள் நித்திரை செய்யும் போதோ அல்லது தன்னை மறந்த நிலையில் தியானம் செய்யும் போதோ தான் சாத்தியம். கூடுதலாக அவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது அவர்களின் கனவுகளில் நாங்கள் எங்கள் செய்திகளைத் தூவி விடுவோம்" என்றார். ராகவன் அந்த முயற்சியை அவ்வளவு விரும்பவில்லைப் போலிருந்தது. "பூவுலகிலிருக்கும் போது கனவுகளை நாம் பெரிதாக எடுப்பதில்லை. அது எங்கள் கற்பனை என்றல்லவோ எண்ணினோம். அவ்வாறே நீரஜாவும் நினைக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்" என்று ராகவன் முத்துவைக் கேட்டார். "முயற்சிப்போம். இச்செய்தி உங்களிடமிருந்து தான் வந்ததென்று நீரஜா நம்பக்கூடிய விதமாகக் கனவில் நீங்களே சென்று அவளிடம் சொல்லுங்கள்" என்றார் முத்து. வேறு ஒரு வழியுமில்லாததால் ராகவன் இதற்கு சம்மதித்தார். இருவரும் என்னென்ன விதமாக நீரஜாவை நம்ப வைப்பதென்று ஆலோசித்தார்கள். அன்றிரவு அதே மாலையுடன் நீரஜாவின் கனவில் ராகவன் சென்று தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவள் அழுவது தனக்குக் கவலையைத் தருவதாகவும் சொன்னார். மறுநாள் நீரஜா நிர்மலமான மனதுடன் கண் விழித்தாள். தனது கனவைக் கணவனிடம் மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டாள். "நான் நினைக்கிறேன் நான் அழுவது அப்பாவைக் கவலைப்பட வைக்கிறது என்று. எனவே இனிமேல் நான் அவரை நினைத்து அழக்கூடாது" என்று அவள் கணவனிடம் சொல்வதை ராகவனும் முத்துவும் கேட்டுக் கொண்டனர். ராகவனுக்கு நெஞ்சை விட்டு ஒரு பெரிய பாரம் இறங்கியது போல இருந்தது. முத்துவைக் கட்டிக்கொண்டு தனது நன்றிகளை கொட்டித் தீர்த்தார். 

முத்துக்கிருஷ்ணனும் ராகவனும் காலாற அக்கடற்கரையில் நடந்துகொண்டிருந்தனர். ராகவனின் மனதை ஏதோ ஒரு விஷயம் ஆக்கிரமித்து இருப்பதை முத்து உணர்ந்தார். அவர் ராகவனைப் பார்த்து, "என்ன விஷயம் ராகவன். ஏதோ தீவிரமாக யோசிப்பதாகத் தெரிகிறதே?" என்று ஆதரவாகக் கேட்டார். ராகவன் சற்று யோசனையுடன், "உங்களுக்குத் தெரியும் தானே எனது திருமண வாழ்வில் நிகழ்ந்த விஷயங்கள். ஏன் அப்படி நிகழ்ந்தன என யோசிக்கிறேன். அதற்கும் ஏதாவது காரணம் இருக்குமா தெரியவில்லை" என்றார். முத்துக்கிருஷ்ணன் சற்றே யோசித்தார். பின்னர், "நாம் வேண்டுமென்றால் ஆகாயப் பதிவுகளைச் சென்று பார்வையிடலாம்" என்றார். "ஆகாயப் பதிவுகளா? அப்படியென்றால்?" என்று கேட்டார் ராகவன். "ஆமாம் ராகவன், நாம் பிறந்ததிலிருந்து (அல்லது படைக்கப் பட்டதிலிருந்து என்று சொல்லலாம்) எமது ஒவ்வோர் எண்ணமும் சொற்களும் செயல்களும் எமது ஆத்மாவின் உள்மனதில் பதிந்திருக்கும். வெளி மனதுக்கு இவை தெரியாவிட்டாலும் உள்மனதில் அவை பதிந்திருக்கும். அவற்றை நாம் ஆகாயப் பதிவுகளிலும் (akashic records) பார்க்கலாம். 

முத்துக்கிருஷ்ணன் ராகவனை ஒரு சிறிய மண்டபத்துள் அழைத்துச் சென்றார். பெரிய தூண்களுடன் கூடிய அம்மண்டபத்துள் எங்கிருந்தோ வெண்ணிற ஒளி வந்து கொண்டிருந்தது. அதன் மையத்தில் தூண் போன்றதொரு  சிறிய மேடையில் ஒரு பெரிய புத்தகம் விரித்து வைக்கப் பட்டிருந்தது. இருவரும் அதனருகே சென்றனர். முத்துக்கிருஷ்ணன் முன்பே பழக்கப்பட்டவர் போல அதன் பக்கங்களைத் திருப்பினார். பூவுலகில் பார்த்த புத்தகங்கள் போல அது இல்லை. அப்புத்தகமே உயிருள்ள ஒரு வஸ்துவைப் போல ராகவனுக்குத் தென்பட்டது. ஒரு குறிப்பிட்ட பக்கத்தைத் திருப்பிய முத்துக்கிருஷ்ணன் இதோ இங்கே தான் உங்கள் கேள்விக்குரிய பதில் உள்ளது ராகவன் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக ராகவனுக்கும் புரிய ஆரம்பித்தது. பூவுலகிலுள்ள எந்தவொரு மொழியிலும் அது எழுதப் பட்டிருக்கவில்லை. எப்படி மேலுலகிலுள்ளவர்கள் ஒருவரோடொருவர் மானசீகமாக உரையாடுவார்களோ அவ்வாறே அப்பக்கத்தைப் பார்க்கையில் ராகவனுக்கு அவரது கேள்விக்குரிய பதில் கிடைத்தது. இதற்கு முந்தைய பிறவியில் அவர் ஒரு பணக்காரப் பெண்மணியாக இருக்கையில் தனது கணவரை (அவர் ஏழை வீட்டிலிருந்து வந்த காரணத்தால்) அவள் மதிக்கவில்லை. அதனால் தான் கடந்த பிறவியில் அவருக்கு அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது என்பது தெரியவந்தது. ஆகாயப்பதிவின் அப்பக்கத்தைப் பார்க்கையில் அப்பிறவியின் கணவரின் மனநிலையை ராகவானால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்போ அவரது மனம் சமாதானமடைந்தது. இப்போ அவர் மேலுலகில் அடுத்த கட்டத்துக்குச் செல்லக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டிருந்தார். 

"நாம் இப்போ பாடசாலைக்குச் செல்லப் போகிறோம் ராகவன்" என்றார் முத்து. ராகவன் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார். "என்ன பாடசாலையா?" என்று கேட்டார். முத்து ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினார். "என்ன முத்து நாங்களிருவரும் எப்பவோ படித்து முடித்து விட்டோமே! பிறகேன் நாம் பாடசாலைக்குச் செல்லப் போவதாகச் சொல்கிறீர்கள்?" ராகவன் ஒரு சிறிய புன்னகையுடன் கேட்டார். "இது வித்தியாசமான பாடசாலை" என்றார் முத்துகிருஷ்ணன். மீண்டும் அவர், "இங்கே எங்களுக்கு எப்படி ஞாபகப்படுத்துதல், எப்படி மறத்தல், படிக்காமலே எவற்றையெல்லாம் அறியலாம் என்றெல்லாம் கற்றுத்தரப்படும்" என்றார். "ஓ அப்படியா" என்றார் ராகவன். அவரின் மனதில் ஆர்வம் துளிர்த்தது. முத்து அவரை ஒரு பாடசாலைக் கட்டடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பலர் வகுப்பறை போல தென்பட்ட ஒரு அறையில் இருந்தனர். அவர்களின் நடுவே வெண்ணிற தாடியுடன் இருந்த ஒருவர் இவர்களையும் வரவேற்று அமரச் செய்தார். பின்னர் அவர் அனைவரையும் பார்த்து, "நீங்கள் எல்லோரும் ஏன் இங்கே வந்துள்ளீர்களென உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன்" என்று கேட்டார். எல்லோரும் மௌனமாக இருக்கையில் புதிதாக வந்த ஒருவர் தனது கையை உயர்த்தி உரத்த குரலில், "எனக்கு நான் இங்கே ஏன் வந்தேனென்று தெரியவில்லை சேர்" என்கிறார். ஏனையவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்கின்றனர். அனைவரின் பார்வையிலும் ஒரு புரிதல் தெரிகின்றது. அவர்களுக்கும் முதலில் ஒன்றும் புரியாமலிலிருந்து பின்னர் புரிந்து கொண்டிருக்கலாம். அந்த வயதானவர் மெதுவாகச் சொன்னார், "கவனமாகக் கேள் மகனே. ஏனெனில் இது மிக முக்கியமாகத் தெரியவேண்டிய விஷயங்களில் ஒன்று. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நான் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். எமது மேலுலகிற்குப் புதிதாக வந்துள்ள ஜேம்ஸையும் (ராகவனைப் பார்த்து) ராகவனையும் நாம் வரவேற்போம். புதிதாக வந்துள்ளவர்கள் இந்த மாற்றத்துக்கு இன்னும் பழக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் இதே குழப்ப நிலையில் தான் இங்கிருக்கும் பலர் சமீபகாலம் வரையில் இருந்ததனால் நாமனைவரும் சேர்ந்து அவர்களின் மனக்காயங்களை ஆற்றுவோம். ராகவன், ஜேம்ஸ், நாங்கள் கைகள், கால்களிலும் பார்க்க உங்களுக்கு மிக அண்மையிலுள்ளோம். எனவே நீங்கள் தனியே நின்று குழம்பத் தேவையில்லை. தற்போதைக்கு உங்கள் உற்றார் உறவினர்களை நீங்கள் பார்க்கவும் அவர்களுடன் பேசவும் இயலுமாக உள்ள போதும், அவர்களால் உங்களைப் பார்க்கவோ பேசவோ இயலாதென்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிலும் பார்க்க உயிரோட்டமாக உள்ளதை இது நிரூபிக்கின்றது. உங்களது அறிவுத்திறன், உணர்வுகள், புலன்கள் உட்பட அனைத்தும் முன்பிலும் பார்க்க மிகக் கூர்மையானதால் நீங்கள் பூதவுடலை விட்டு வெளியேறி விட்டீர்கள்" என்று புதியவர்களுக்கு மேலுலகை அறிமுகம் செய்து வைக்கும் பாணியில் பேசினார். 

கொஞ்சம் கொஞ்சமாக ராகவனும் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார். ஒருநான் முத்து ராகவனை வேறோர் இடத்துக்கு அழைத்துச் சென்றார். "எங்கே போகிறோம்?" என ராகவன் கேட்டதற்கு முத்து, "இப்போ நாம் தியானமண்டபத்துள் செல்லப்போகிறோம்" என்றார். ஒரு விசாலமான மண்டபத்துள் இருவரும் நுழைந்தனர். அங்கு மென்மையான ஒரு ரீங்காரம் கேட்டுக்கொண்டிருந்தது. அது மனதுக்கு இதமாக இருந்தது. பலர் தியானத்தில் இருப்பது தெரிந்தது. இவர்களும் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்தனர். மனம் அமைதியில் ஆழ்ந்தது. மனம் அமைதியில் ஆழ்ந்துகொண்டு செல்லும் போது ராகவானால் இறைவனின் அருகாமையை முழுவதுமாக உணர இயலுமாக இருந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் தான் இருப்பதை விடப் பிரபஞ்சமே தனக்குள் இருப்பது போல அவர் உணர்ந்தார். அந்த நிலையில் தான் ஒன்றுமில்லாமல் போய் விட்டது போல் உணர்ந்தார். 

                                 சுபம்  

Comments